- ஹக்கீம், பொன்சேகா, சம்பந்தனுக்கு செப். 09 அல்லது 11 இல் ஆஜராக அழைப்பு
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம், 7ஆம் திகதிகளில், அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இம்முறைப்பாடுகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர், வைத்தியர் நிஹால் ஜயதிலக, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (21) முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, மங்கள சமவீர மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரஊப் ஹக்கீம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் மற்றும் குழு செயலாளர் ஆனந்த விஜேபால ஆகியோரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதி அல்லது, 11ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
Add new comment