முஸ்லிம் சமூகத்தை அரசியல் மயப்படுத்துவதற்காக மாத்திரமே, பெருந்தலைவர் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட, அந்த பேரியக்கத்திற்கு அவர் முஸ்லிம் காங்கிரஸ் என்று பெயர் வைத்தார். ஈற்றிலே அந்தப் பெயரின் மூலம், இந்த நாட்டிலே துவேசம் எழுந்துவிடக்கூடாது என்பதற்காக, அதற்கு விடைகொடுத்தார் என தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக, போட்டியிடுகின்ற, வேட்பாளர்களை ஆதரித்து, பொத்துவில் பிரதேசத்தில், வேட்பாளர் எம்.எஸ்.எம்.அன்ஸார் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் சமூகத்தை அரசியல் மயப்படுத்துவதற்காகவே, பெருந்தலைவர் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட, அந்த பேரியக்கத்திற்கு அவர் முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரை வைத்து, அதனால் முஸ்லிம் சமூகத்தை அரசியல் மயப்படுத்தினார். ஈற்றிலே அந்தப் பெயர் மூலம், இந்த நாட்டிலே துவேசம் எழுந்துவிடக்கூடாது என்பதற்காக, தனது கடைசி மரணத்தருவாயில் அதற்கு விடைகொடுத்துவிட்டு, தேசிய ஐக்கிய முன்னனி என்ற ஸ்தாபனத்தை உருவாக்கினார்.
குறிப்பாக இந்த நாட்டிலே வாழ்கின்ற, எல்லா சமூகங்களும் சுபீட்சம் பெறுகின்ற பொழுதுதான், முஸ்லிம் சமூகத்திற்கும் சுபீட்சம் கிடைக்கும் என்கின்ற, ஒரு முக்கியமான கருத்தின் அடிப்படையிலேதான், அவர் அவ்வாறு செய்தார். பெருந்தலைவர் அஷ்ரப் மரணித்த பின், அவர் விடைகொடுத்த முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற, அந்தக்கட்சியை எடுத்துக்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களின் துணையோடு, அந்தக்கட்சியினை திசை மாற்றி, முஸ்லிம், முஸ்லிம் என்று இனக்கலவரங்களையும், துவேசங்களையும் பரப்புவதற்கான ஆயுதமாக பாவித்து, முஸ்லிம்களை ஏனைய சமூகங்களிலிருந்து பிரித்துவிட்டார்கள்.
இவ்வாறுதான் பிரித்தானியாவில் இருந்துகொண்டு தமிழர்கள், தமிழர்கள் என்று பேசவைத்து, தமிழர்களையும் பிரித்துவிட்டு, இந்த நாட்டிலே வாழுகின்ற மூன்று இனங்களுக்கும், ஒருவருக்கு இரண்டு பேர் எதிரிகள் என்கின்ற நிலைமைகளை ஏற்படுத்திருக்கிறார்கள். இவைகளில் இருந்து முதலில் சகலரும் விடுபட வேண்டும். நாடு மகவும் மோசமான சூழ்நிலையிலே சென்றுகொண்டிருக்கிறது என்பதற்காகத்தான், தேசிய காங்கிரஸ் எனும் கட்சியினை அமைத்து, பெருந்தலைவர் விட்டுச்சென்ற இடத்திலிருந்து அவரது பணிகளை தொர்ந்து கொண்டிருக்கின்றோம்.
பெருந்தலைவருடைய கொள்கைகளையும், பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். இந்த நாட்டிலே வாழ்கின்ற மூவின மக்களுக்கும் பணி செய்ய வேண்டும் என்பதற்காக, சுமார் 20 ஆண்டுகள் போராடிக்கொண்டிருக்கின்றோம். எமது மக்களை இருபது வருடங்களாக ஏமாற்றி அரசியல் செய்து வருகின்றனர். இனியும் நாம் ஏமாற முடியாது. எமது மக்களை வாழ வைப்பதற்காக இளைஞர்கள் தேசிய காங்கிரசோடு இணைய வேண்டும். அதற்காக பொத்துவில் பிரதேச இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். கிழக்கு மாகாணத்திலே வாழ்கின்ற தமிழ், சிங்கள மக்களும் எமது கொள்கைகளை ஏற்று, எங்களோடு கைகோர்த்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் பொத்துவில் இளைஞர்கள் திசைமாறக்கூடாது.
கடந்தகாலங்களில் தேசிய காங்கிரஸ் அரசியல் அதிகாரங்களை கொண்டிருந்த போது இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் பல்வேறு பணிகளை செய்திருக்கிறது. அந்தக்காலங்களில் எல்லாம் மக்கள் எனக்கு வாக்குப் போட்டார்களா இல்லையா என்று நான் ஒருபோதும் சிந்திக்கவில்லை. மக்களுடைய கஷ்டத்திலே அரசியல் செய்வதற்கும் நான் என்னவில்லை. சகலரும் எமது மக்கள் என்கின்ற உணர்வுகளோடு செயற்பட்டோம் என்றார்.
(பாலமுனை விசேட நிருபர் - ஏ.எல். றியாஸ்)
Add new comment