சீனா வெள்ளை அறிக்கை
கொரோனா வைரஸ் பரவல் குறித்து சீனா நேற்று வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளதுடன் அதில் தங்கள் மீது எந்த தவறும் இல்லையென தன்னிலை விளக்கத்தையும் அளித்துள்ளது. கடந்த ஜனவரி 03ஆம் திகதியே எச்சரித்ததாகவும் சீனா விளக்கமளித்துள்ளது.
சீனா,இந்த வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் என்பது போன்ற முக்கிய தகவல்களை சீனா ஆரம்பத்திலேயே எச்சரிக்கை செய்யாமல் மறைத்ததாகவும், உலக சுகாதார அமைப்பை தவறாக வழி நடத்தியதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் சீனா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றன.
கொரோனாவால் உலகின் ஒட்டுமொத்த பொருளாதார பேரழிவுக்கு காரணமே சீனாதான் என நெருக்கடிகள் வலுக்கின்றன. இந்த விவகாரத்தில் சீனா,-அமெரிக்கா இடையேயான மோதல் வலுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பிற்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கோவிட்-19 கொரோனா வைரஸ் வூஹானில் கடந்த டிசம்பர் 27ஆம் திகதி முதலில் கண்டறியப்பட்டது. ஆரம்ப கட்ட ஆய்வில் இது வைரஸ் நிமோனியா என்ற முடிவுக்கு நிபுணர்கள் வந்தனர். பின்னர் தேசிய சுகாதார ஆணையத்தின் உயர்மட்ட நிபுணர்கள் குழு வூஹான் சென்று ஆய்வு செய்தது. ஜனவரி 19ஆம் திகதிதான் இந்த வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் என்பது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக மக்களை எச்சரிக்கை செய்தோம். இந்த வைரஸ் வவ்வால்கள் அல்லது எறும்பு உண்ணிகள் மூலம் தொற்றி இருக்கலாம் என்றாலும் அதற்கு உறுதியான ஆதாரங்கள் ஏதுமில்லை.ஜனவரி 03ஆம் திகதியே இது அடையாளம் தெரியாத நிமோனியா என வகைப்படுத்தப்பட்டு இதைப் பற்றி உலக சுகாதார நிறுவனத்திற்கும், அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை செய்தோம். கொரோனா குறித்து சரியான நேரத்தில் சர்வதேச நாடுகளுக்கு நாங்கள் தகவல் தெரிவித்துள்ளோம். அதோடு, சமூக பரவல் தொடங்கியதுமே வூஹானில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வைரஸ் பரவலை தடுக்க நாடு தழுவிய நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சீனாவின் இந்த நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனமும் பாராட்டியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Add new comment