தடுப்பு மருந்து தேவையில்லை; கொரோனா அடங்கிப் போகும்!

தடுப்பூசி இல்லாமலேயே கொரோனா வைரஸை ஒழித்துக் கட்டுவதற்கு ஏற்றது இந்தியாதான் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இவரது கருத்துகளுக்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது. இந்தியாவில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் பொருளாதார நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. பொதுப்போக்குவரத்து படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய மக்கள்தொகை பெருக்கம் கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு இன்னும் வேகமாகப் பரவக் கூடும் என்று கூறப்படுகிறது.

ஆனால், கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஒன்றரை ஆண்டுகளாகக் கூடும் என்று பல விஞ்ஞானிகளும் தெரிவித்தபடி இருக்கிறார்கள். 720 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த உலகிலுள்ள அத்தனை பேருக்கும் தடுப்பு மருந்தைக் கொண்டு சேர்க்க  மேலும் இரண்டு ஆண்டுகளாகலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே  அதற்கு முன்பாக வைரஸை கட்டப்படுத்துவது எப்படி என்பது பற்றித்தான் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஒரு நேர்காணலில் அவர் இதுபற்றிக் கூறுகையில், 1918 ஆம் ஆண்டு இன்புளூவன்சா நோய் தொடர்ச்சியாக மூன்று முறை சுழன்றடித்தது. இரண்டு வருடங்களுக்கு அந்த நோய் நீடித்தது. இந்த நோய் பரவல் இரண்டு வழிகளால் நின்றது. ஒரு வழிதாக்கப்பட்டவர் இறந்து போனது. இன்னொரு வழி தாக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. இந்த இரண்டில் ஒன்றுதான் அந்த வைரஸ் பரவலை நிறுத்த உதவியது.

ஃப்ளூ பெருந்தொற்று  ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக பரவியது. 1895 ஆம் ஆண்டில் அது முடிவுக்கு வந்தது. ஒட்டுமொத்த மக்களும் ஃப்ளூ காய்ச்சலுக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றதால் இந்த நோய் முடிவுக்கு வந்தது. கொரோனா வைரஸ் பிரச்சினையும் தடுப்பூசி இல்லாத இந்த காலகட்டத்தில் இப்படித்தான் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.

இந்தியாவை பொறுத்த அளவில் இந்த மந்தை நோய் எதிர்ப்பு சக்திக்கு (Herd immunity) ஏற்ற ஒரு நாடு. ஏனெனில் இங்கு 82 சதவீதம் பேர் 50 வயதுக்கு கீழே உள்ளவர்கள். இவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் கூட இருக்கலாம். இலேசான அறிகுறிகள் இருக்கலாம். இறப்பு வீதம் என்பது 0.2 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும்.

50 முதல் 59 வயதுக்குட்பட்டோர் 8 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு நோய் தாக்கினால் இறப்பு சதவீதம் என்பது 0.4 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கும். 1 சதவீதம் என்ற அளவுக்கு கூட உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

60 வயதுக்கு உட்பட்ட நபர்களை ஊரடங்கை தளர்த்தி இயல்பாக வாழ்க்கையை வாழ விடுவதால் அவர்கள் நோய் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவ்வாறு பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சைக்கு பிறகு மீண்டு வருவார்கள். அவர்கள் உடலில் அந்த நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் காரணமாக 99.7 சதவீதம் அளவுக்கு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெறுவார்கள். எனவே இந்த நோய் ஒழியும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார் ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் முதியவர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். நகர்ப்புறங்களிலும் வாழ்கிறார்கள். அவர்களை எப்படி தனிமைப்படுத்தி பாதுகாப்பது என்பது பெரிய கேள்வியாக உள்ளது. எனவே  இந்த மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்பதெல்லாம் மக்கள் தொகை குறைவாக உள்ள மற்றும் தனி குடித்தனம் நடத்த கூடிய கலாசாரம் கொண்ட நாடுகளுக்கு பொருந்துமே தவிர, இந்தியாவில் இப்படி செய்யும் போது முதியவர்கள் பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்படுவார்கள் என்று சில மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மற்றொரு பக்கம் இந்தியர்கள் பரிசோதனைக் கூடத்துக்கான எலிகளா  என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுகின்றன.

ஒரு சில குரங்குகள் அல்லது எலிகளுக்குத்தான் பரிசோதனை செய்து மருந்துகள் கண்டுபிடிப்பார்கள். ஆனால், உலக சுகாதார அமைப்பு ஒட்டுமொத்த இந்தியர்களையும் பரிசோதனைக் கூடத்து எலிகள் போல நினைத்துக் கொண்டு பேசுவது சரியில்லை என்று கண்டனங்கள் எழுகின்றன.


Add new comment

Or log in with...