அசிரத்தை காட்டக்கூடாத வைரஸ்

சீனா போன்று விரைவாகக் கட்டுப்படுத்துவதற்கான வழி

உலகம் முழுவதும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற கொரோனா என்கிற கொவிட் - 19 வைரஸ் இற்றைவரையும் இலட்சக்கணக்கானோரைப் பாதித்துள்ளதோடு ஆயிரக்கணக்கானோரின் உயிர்களையும் பறித்துள்ளது. உலகலாவிய தகவல்களின் படி மார்ச் 30ஆம் திகதி வரையும் உலகில் 07இலட்சதது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்களும் காவுகொள்ளப்பட்டுள்ளன. அதேநேரம் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்திருப்பதையும் மறந்து விடமுடியாது. என்றாலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

சீனாவின் உஹான் நகரில் 2019 டிசம்பர் மாத இறுதிப்பகுதியில் தோற்றம் பெற்ற இவ்வைரஸ், சீனாவில் மாத்திரமல்லாமல் சீனாவுக்கு வௌியேயும் 194 நாடுகள் வரையும் பரவிவிட்டது. இவ்வைரஸ் தோற்றம் பெற்ற குருகிய காலப்பகுதிக்குள் அதாவது, மூன்று மாத காலப்பகுதிக்குள்  இவ்வளவு  வேகமாகப் பரவியமையும் அதன் தாக்கங்களும மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இற்றைவரையும் இவ்வைரஸைக் கட்டுப்படுத்தவோ தவிர்த்துக் கொள்ளவோ மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாமையால் மக்கள் பெரிதும் பீதியடைந்துள்ளனர்.  செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.

இவ்வாறான சூழலில் இவ்வைரஸின் பரவுதலையும், தாக்கத்தையும் கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு நாடும், பிராந்தியமும் பரந்தடிப்படையிலும் விரிவான முறையிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. இருந்த போதிலும் சாதாரண மக்கள் முதல் பிரித்தானிய பிரதமர், கனடா பிரதமரின் மனைவி, பிரான்ஸ் கலாசார அமைச்சர், ஈரானின் பிரதி சுகாதார அமைச்சர் என்றபடி உயர் பதவி வகிப்பவர்களை மாத்திரமல்லாமல் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களுக்கு  சிகிச்சை அளிக்கின்ற டொக்டர்களையும் கூட பாதிக்கவே செய்திருக்கின்றது.  இற்றைவரையும் நூற்றுக்கும் மேற்பட்ட டொக்டர்கள் இவ்வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு முழு மனித சமூகத்திற்கும் பெரும் சவாலாக விளங்குகின்ற கொரோனா தொற்றுக்கு இலங்கையில் நேற்று வரையும் 122 பேர் உள்ளாகியுள்ளனர் அவர்களில் 15 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். ஆனால் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார்.

இவ்வைரஸின் தாக்கத்தையும் அதன் பாதிப்பையும் தௌிவாக உணர்ந்துள்ள ஜனாதிபதியும் அரசாங்கமும் சுகாதாரத்துறையினரும் அதன் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான உச்சபட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றனர். என்றாலும் இது ஒரு தொற்று நோயாக இருப்பதால் அதனைக் கட்டுப்படுத்தவென  பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அத்தியாவசியமானது. அவர்களது ஆதரவு இன்றி இதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது.

அந்தளவுக்கு பலமான வைரஸாகக் கொரோனா விளங்குகின்ற போதிலும் அதன் தாக்கம், பாதிப்பு தொடர்பில் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்பவர்களை நாட்டில் பரவலாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இவ்வைரஸின் பரவுதலைக் கட்டுப்படுத்துவதே அதன் தாக்கத்தையும் பாதிப்புக்களையும் தவிர்த்துக் கொள்வதற்கான சிறந்த மார்க்கமாக இற்றை வரையும் விளங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் கைகழுவுதல் தொடர்பில் கூட கவனம் செலுத்தப்படாத நிலை காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  சிலர் தம் நகங்களை அழகுக்காக நீளமாக வளர்த்து வைத்துள்ளனர்.  இன்னும் சிலர் வைரஸ் தவிர்ப்புக்கான எவ்வித  முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளாது அடிக்கடி முகத்தை தொடுகின்றனர். ஆனால்  அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பில் 2006 முதல் 2012 வரை கற்று கலாநிதி பட்டம் பெற்றுள்ள இந்திய  விஞ்ஞானி டொக்டர் பவித்ரா வெங்கட்கோபாலன், 'கைகளை நன்கு சவர்க்காரமிட்டு சுமார் இருபது வினாடிகள் கழுவிக் கொள்வது கொரோனா வைரஸை அழிக்கவும் நீக்கவும் உதவும். குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் நகங்களை கட்டையாகவும் சுத்தமாகவும் வைத்து கொள்ளும் போது தான் கை விரல்களை நன்கு கழுவக்கூடியதாக இருக்கும் ' என்று தெரிவிக்கின்றார் 

கொரோனா வைரஸானது கொழுப்பினால் ஆன வழுவழுப்பான உடல் மேற்பரப்பைப் கொண்டிருக்கின்றது. அதனை தண்ணீரை மாத்திரம் கொண்டு அப்புறப்படுத்தவோ அழிக்கவோ முடியாது. அதற்கு சவர்க்காரம் இட்டு கழுவுவதுதான் சிறந்த தீர்வாக அமையும்.  மதுசாரம் கொண்டு கைகழுவும் போது கொரோனா அழியும். சவர்க்காரம் கொண்டு நுரைக்க  20 வினாடிகள் கையைக் கழுவினால் வைரஸ் அழிந்து கையிலிருந்து நீங்கிவிடும் என்பது தான் நுண்ணுயிரியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அதனால்  இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாத விடயமாகும்.

அதேநேரம் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி இவ்வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்  ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் செயற்படுபவர்களையும் காணக்கூடியதாக உள்ளது.

ஆனால் இவ்வைரஸின் பரவுதல், தாக்கம் மற்றும் பாதிப்பு தொடர்பில் கவனயீனமாகவும் பொறுப்பற்ற விதத்திலும் நடந்து கொள்ள வேண்டாமென சில டொக்டர்கள் மிகவும் கனிவாக மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். அதனையும் கூட கருத்தில் கொள்ளாமல் செயற்படுபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டவர்களில் சிலர் அவற்றை ஒரு பொருட்டாகக் கூட கருதி செயற்பட்டதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக புத்தளம், களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் சில கிராமங்களை முழுமையாக மூடிவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஓரிருவரின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் முழு கிராம மக்களும் இவ்வைரஸ் அச்சுறுத்தலுக்கும் பாதிப்புக்கும் முகம் கொடுக்கும் துரதிஷ்டகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இவ்வைரஸின் தாக்கம்,

பாதிப்பு தொடர்பில் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்ளும் நிலைமை குறித்து பரவலாகக் கவலையையும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் இவ்வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியது ஒவ்வொருவரதும் பொறுப்பும் கடமையுமாகும்.

ஏனெனில் இவ்வைரஸின் தாக்கம், பாதிப்பு மற்றும் அதன் கொடூரம்  குறித்து நன்கு அனுபவப்பட்ட சீனாவில் கடமையாற்றிய இந்திய மருத்துவரான டொக்டர் பியூஸ் சர்மா தெரிவித்திருக்கும் தகவல்கள் மெய்சிலிர்க்கக் கூடியவனாக உள்ளன. அத்தகவல்களை எழுந்தமானதாக அன்றி முன்னுதாரணம் மிக்கவையாக நோக்க வேண்டிய காலமிது. 

'சீனாவின் உஹான் நகரில் கொரோனா வைரஸ் முதலில் அடையாளம்  காணப்பட்டது. அதன் தாக்கம், கொடூரத்தை டொக்டர்கள் அறிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து உஹான் உள்ளிட்ட முழு மாகாணமும் ஏனைய பிரதேசங்களில்  இருந்து முதலில் தனிமைப்படுத்தப்பட்டது. இதற்கு சீன மக்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்கினர். எல்லா மக்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். எவரும் வீதிக்கு வந்து வேடிக்கை பார்க்கவில்லை. ஏனெனில் ஏதாவது பிரச்சினை என்றால் அதற்கு தயாராகிவிடும் பழக்கம் அவர்களிடம் காணப்படுவது தான் இதற்கு காரணம். இதன் பயனாக கொரோனா தொற்றை விரைவாக சீனாவினால்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.

அது தான் உண்மை. இந்த கொரோனா தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு  இன்றுள்ள ஒரே மார்க்கம் வீடுகளுக்குள் இருப்பதும் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்வதும் அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்களை உச்சளவில் பேணுவதும் தான். ஆனால் இவை தொடர்பில் கவனயீனமாக நடந்து கொள்ளும் நிலைமையைப் பரவலாக அவதானிக்க முடிகின்றது. ஆனால் இதன் விளைவு மிக மோசமாக இருக்கும். அதற்கு இத்தாலி, ஸ்பெய்ன் முகம் கொடுத்திருக்கும் நிலைமைகள் நல்ல எடுத்துக்காட்டுக்களாகும்.

அதேநேரம் தன் அனுபவத்தைத் தொடர்ந்தும் விபரித்துள்ள டொக்டர் ஷர்மா, 'இவ்வைரஸ் தொற்றுக்குள்ளாகி நோய் வாய்ப்பட்ட சீன நோயாளர்கள் அனுபவித்த வேதனைகள், துன்பங்கள், சுவாசிப்பதில் எதிர்நோக்கிய நெருக்கடிகள் விபரிக்க முடியாதவை. அந்தளவுக்கு பயங்கரமானவை.

அளிக்கப்பட்ட சிகிச்சைகள்  பலனளிக்காத சந்தர்ப்பத்தில் சுவாசிப்பதில் நெருக்கடி ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்தனர்.

இந்நிலைக்கு சாதாரணமானவர்கள் மாத்திரமல்லாமல் செல்வச் செளிப்பு மிக்கவர்களும் கூட உள்ளாகினர். 

இவ்வாறு உயிரிழந்தவர்களின் பிரேதங்கள் கூட உறவினர்களுக்கு வழங்கப்படவுமில்லை. இறுதிச்சடங்கும் செய்யப்படவுமில்லை. அனாதைகளின் பிரேதங்களைப் போன்று அவை மிகப்பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு எரித்து அழிக்கப்பட்டன. இவை எண்ணிப்பார்க்க முடியாத  காட்சிகள்' என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்தளவுக்கு பயங்கரமான வைரஸ் இது. இருந்தும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இவ்வைரஸின் கோரமுகத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதிருப்பதன் விளைவாகவே அது தொடர்பில் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்கின்றனர். இது பெரும் கவலைக்குரிய நிலைமையாகும்.

சீனா தனிமைப்படுத்தல் திட்டத்தை வைத்து எவ்வாறு இவ்வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தியது என்பது தொடர்பிலும் டொக்டர் ஷர்மா  விளக்கவும் தவறவில்லை. 'கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளில் கடமையாற்றிய டொக்டர்கள், தாதியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கான உணவு, தங்குமிட வசதி உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளும் வைத்தியசாலைகளில் செய்து கொடுக்கப்பட்டன. 

இருபது நாட்கள் பணியாற்றிய பின்னர் விடுமுறை கிடைக்கப்பெற்றும் வீடு செல்ல இடமளிக்கப்படவில்லை.

ஏனெனில் எம்  ஊடாக எமது  குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இவ்வைரஸ் பரவுவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டொக்டர்கள், தாதியர்கள் விண்வௌி வீரர்கள் அணிவது போன்ற விஷேட உடையைத் தரித்து தான் சிகிச்சை அளிக்கின்றனர். இந்த உடையில் ஒரு ஓட்டை கூட கிடையாது. கண்ணாடியுடனான முகக்கவசம் அணிந்து கொள்கின்றோம்.

அப்படி இருந்தும் அந்த உடை கூட கொரோனா தொற்றை தவிர்ப்பதற்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடாக இல்லை. அதனால் தான் இந்த உடை தரித்து கடமையாற்றியவர்களும் கூட ஆயிரத்துக்கும் மேல் சீனாவில் உயிரிழந்திருக்கின்றனர்

அதனால் இவ்வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கும் கூட 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தான் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தனிமைப்படுத்தலுக்கு உஹான் மக்கள் முழுமையாக அளித்த ஒத்துழைப்பின் விளைவாக  நாட்டிலிருந்த எல்லா மருத்துவ வசதிகளையும் உஹானுககு கொண்டு வந்து இவ்வைரஸ் பரவுதலை விரைவாகவும் துரிதமாகவும் கட்டுப்படுத்த முடிந்தது' என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் டொக்டர் ஷர்மா.

ஆனால் இலங்கையில்  இற்றை வரையும் பல பிரதேசங்களில் இவ்வைரஸ் தொற்று பதிவாகிவிட்டது. அதனால் சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும் மக்கள் முழுமையாக ஒத்துழைக்கும் போது  தான் சீனாவைப் போன்று விரைவாகவும் வேகமாகவும் இவ்வைரஸ் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இது விடயத்தில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் அவசிய தேவையாகும்.

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...