அர்ப்பணிப்பான சேவையில் முப்படையினர், பொலிஸார்

கொரோனா பரவுவதைத் தடுத்து, நாட்டு மக்களைப் பாதுகாக்க இரவு பகலாக தொடர்ந்து களத்தில்!

முழு உலகமுமே கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஸ்தம்பிதமடைந்துள்ள இவ்வேளையில், உலக மக்களை அதிலிருந்து மீட்பதற்காக சுகாதாரத் துறையினரும் இராணுவ, கடற்படை, விமானப் படையினரும் பொலிஸாரும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது தங்களுடைய உயிரையும் கருத்திற் கொள்ளாமலேயாகும்.

இவ்வாறு அடுத்தவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நாட்டின் மரியாதையும் கௌரவமும் கிடைக்க வேண்டும். மூன்று தசாப்த காலமாக இந்நாட்டைப் பீடித்திருந்த யுத்தத்திலிருந்து தாய்நாட்டை மீட்பதற்காக அங்கங்களை மாத்திரமல்லாது தமது வாழ்க்கையை அன்று அர்ப்பணித்த வீரர்களே மக்களுக்காக கொரோனா தொற்றிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்க இன்று முன்வந்துள்ளார்கள்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பல நடவடிக்கைகளை சரியான முறையில் திட்டமிட்டு எடுத்து வருகின்றது. அதன்படி முழு நாட்டையுமே பொதுமக்கள் சுகாதார திட்டத்தின் கீழ் ஒன்றாக இணைத்துள்ளது.

விசேடமாக கொரோனா வைரஸ் தடுத்தல், நோய் தொற்றி ஒருவர் காணப்பட்டால் அவருக்கு சிகிச்சை அளிப்பது மாத்திரமல்லாமல் இனிமேலும் நோய் பரவாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம் எடுத்த முடிவுகளுக்கமைய தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் உயர்ந்த வசதிகளின் கீழ் சில மணித்தியாலங்களிலேயே அமைக்கப்பட்டன. அங்கு இலங்கை இராணுவம் தமது இராணுவ முகாம்களையும் சில தனியார் வியாபாரிகள் தங்களது வியாபார நிலையங்களையும் இதற்காக பெற்றுக்கொடுத்துள்ளார்கள். அவர்கள் இதனை மக்களின் நலன் கருதியே அர்ப்பணிப்பு செய்துள்ளார்கள்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த ஒருசிலர் தனிமைப்படுத்தலை விரும்பாமல் தேவையில்லாமல் குறைகளை கூறி இதனை சீர்குலைக்க முயற்சி செய்ததை ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டி இருந்தன. அவ்வாறு தனிமைப்படுத்தலை விரும்பாது தப்பியோடிய சிலரால் தற்போது அவர்கள் குடும்ப அங்கத்தவர்கள், பெற்றோர், பிள்ளைகள் இந்நோயின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான நிலைமையில் எமது நாட்டில் சில இடங்களில் சுயவிருப்பத்துடன் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை ஏற்படுத்தி அதில் பணிபுரிய ஒரு சிலர் முன்வந்தமை நாட்டின் மீது கொண்ட அன்பினாலாகும். விசேடமாக தமது பிரதேசத்தின் தனிமைப்படுத்தல் மையமாக அமைந்துள்ள அங்கொட ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலை சூழலிலுள்ள குடியிருப்பாளர்கள் இவ்வேளையில் செய்த அர்ப்பணிப்பு குறித்து நாட்டு மக்களின் நன்றியை தெரிவிப்பது அவசியம்.

இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நாட்டு மக்களுக்காக எமது முப்படைகளும் மற்றும் பொலிஸாரும் செய்யும் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது. நாட்டில் எந்தவொரு அனர்த்தமும் ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களில் எமது இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படை சிவில் பாதுகாப்பு செயலணி பொலிஸாருடன் இணைந்து மக்களை மீட்டெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டதை மறந்து விட முடியாது.

தற்போது மிக மோசமான பாதிப்பை இந்நாட்டில் ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு பாதுகாப்புப் படையினர் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள். தமது உயிருக்கே ஆபத்து வரும் என தெரிந்திருந்தும் அதனை கருத்திற் கொள்ளாது அவர்கள் இவ்வாறு செயற்படாவிட்டால் இன்று எமது நாட்டில் இந்நோயால் பிடிக்கப்பட்டிருக்கும் மக்களின் நிலைமை என்னவாகியிருக்கும் என்று கூற முடியாது.

30 வருட காலமாக காணப்பட்ட யுத்தத்தை தமது உயிரைத் தியாகம் செய்து மீட்டெடுத்து உலகில் சிறந்த இராணுவம் என புகழப்பட்ட முப்படைகள் இருந்திராவிட்டால் இன்றும் எமது நாடு யுத்த நிலைமையிலேயே காணப்பட்டிருக்கும். இவ்வாறே கடந்த காலங்களில் இந்நாட்டில் வெள்ளம், சுனாமி, மண்சரிவு, குப்பைமேடு சரிவு உள்ளிட்ட பொதுமக்களை பலியெடுத்த மிகவும் பயங்கரமான பல சம்பவங்கள் இடம்பெற்றன. அனைத்து வேளைகளிலும் எமது இராணுவ வீரர்களே பணி செய்ய முன்வந்தார்கள்.

அன்று முதல் இன்று வரை இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் தமது உயிரை மாத்திரமல்ல தங்களது பெற்றோர், பிள்ளைகள், உறவினர்களையும் மறந்து நாட்டு மக்களை எண்ணி அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எமது படையினர் கொரோனா வைரஸ் நிலைமையிலிருந்து நாட்டு மக்களை மீட்க வெளிநாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக எமது நாட்டுக்கு வந்தவர்களையும் கண்காணிக்க முன்வந்தார்கள்.

வெளிநாடுகளிலிருந்து மக்கள் எமது நாட்டிற்குள் நுழைந்த சந்தர்ப்பங்களில் கொரோனா வைரஸ் நிலைமையை கருத்திற் கொண்டு சில பணியாளர்கள் அவர்களுக்கு முன்னால் செல்ல பயப்பட்ட வேளையில் எமது இராணுவத்தினர் அவர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதா இல்லையா என எண்ணாது அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முயற்சி செய்தார்கள்.

அவ்வேளையில் அவர்கள் எதிர்ப்பையும் சந்தித்தார்கள். அதுமாத்திரமல்ல அவர்களை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்து செல்ல விரும்பாத போதும் எமது இராணுவ வீரர்கள் அவர்களை பல மைல் தூரத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்திற்கு கொண்டு சென்று பாதுகாத்தார்கள். அதுமாத்திரமல்ல தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு செல்ல விரும்பாத வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களின் தாக்குதல்களை கூட பொறுமையுடன் சகித்து அவர்களை மிகவும் கருணையுடன் நடத்தினார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நபர் இராணுவ சாரதி ஒருவரின் கழுத்தை நெரிக்க முற்பட்ட போது அவர் அதற்கு பொறுமையுடன் முகம் கொடுத்திருந்தார். தற்போது இராணுவத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு அர்ப்பணிப்புடன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அவர்களுக்குத் தேவையான தங்குமிடங்களை தங்களது உறக்கம், உணவு இன்றி புதிதாக நிர்மாணிக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளார்கள். இதேவேளை இம்மோசமான நிலைமையில் தற்போது இராணுவத்தில் சிலருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது அவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்றாது என எண்ணி செயற்பட்டதன் பலனாகும். அதேபோன்று விமானப்படையின் உறுப்பினர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருபவர்களின் வெப்பநிலையை பரிசோதிப்பது தமது கடமையை விட மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டாகும். இன்று நாட்டிற்குள் அங்கும் இங்கும் சென்று மக்களுக்காக தம்மால் செய்ய முடிந்ததை செய்கின்றார்கள்.

அன்று நாட்டை மீட்ட எமது இராணுவத்தை கடவுள் என்று மக்கள் கூறினார்கள். இன்றும் இந்நாட்டில் அவ்வாறே நடவடிக்கையில் ஈடுபடும் எமது இராணுவத்தின் உதவி எமக்குள்ள பெரும் சக்தியாகும் எனக் கூறலாம். இவ்வாறான வலுவான தைரியமான இராணுவம் ஒன்று எமக்கு இருந்திருக்காவிட்டால் இன்று இந்நிலைமைக்கு எவ்வாறு முகம் கொடுத்திருப்போம் என்று சிந்திக்கக் கூட முடியாது.

அவர்கள் இவ்விதம் அர்ப்பணிப்புடன் செயற்படுவது பற்றி கூறுவதற்கு எமக்கு வார்த்தைகள் இல்லை. எமக்கு அவர்கள் மீது பக்தி, அன்பு இதேபோன்று தொடர்ந்து இருக்கும். இந்நாட்டில் அனைத்து நபர்களும் எமது இராணுவத்தினருக்காக அளிக்கும் அன்பையும் கௌரவத்தையும் ஒருபோதும் மறந்து விட முடியாது என்பதை நாம் அறிவோம். அவர்களின் அர்ப்பணிப்புகளுக்கு நாட்டு மக்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகும். அதனால் அவர்களுக்காக எமது பூரண ஒத்துழைப்பை வழங்கி மோசமான தொற்று நோயிலிருந்து நாட்டை மீட்க ஒன்றாக செயற்படுவோம்.

 

சமன்மலி, விஜயானி

 


Add new comment

Or log in with...