வேட்புமனு கையளிப்பிற்காக இருவருக்கு மாத்திரம் அனுமதி

வேட்புமனு கையளிப்பிற்காக இருவருக்கு மாத்திரம் அனுமதி-Only 2 Person allowed for Nomination Process

ஊர்வலங்கள், சட்டவிரோத கூட்டங்களுக்கு தடை

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையளிக்கும்போது, வேட்பு மனுவை கையளிக்கும் நபருடன் மேலதிகமாக ஒருவர் மாத்திரமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நேற்றையதினம் இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பொதுமக்கள் ஒன்றுகூடலை தவிர்க்கும் வகையில் வேட்புமனு கையளிக்கும்போது பிரதிநிதிகள் மூவருக்கு மாத்திரம் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது.  

ஆயினும் தற்போது இருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, மார்ச் மாதம் 17, 18 ஆகிய இரு தினங்களிலும் அலுவலக நேரங்களிலும் மார்ச் 19 ஆம் திகதி காலை 8.30 தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையில் கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனுக்களை கையளிக்க முடியும் எனவும் இதன்போது குறித்த நடைமுறையை பின்பற்றுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (17) நள்ளிரவுடன் தபால்மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்களை கையளிக்கும் கால அவகாசம் முடிவடைந்த போதிலும், எதிர்வரும் 03 நாட்களுக்குள் கிடைக்கின்ற தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்றையதினம் கிடைத்ததாக கருத்திற் கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் சட்டத்தின் கீழ் ஊர்வலங்கள், சட்டவிரோத கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதிகளில் கட்சிகளின் ஆதரவாளர்களை ஒன்றுகூட வேண்டாம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...