தேசிய பூங்காக்களில் இயற்கை விளக்கப் பயிற்சிகளை தொடர சுற்றுலா அதிகார சபை முடிவு

தேசிய பூங்காக்களில் இயற்கை விளக்கப் பயிற்சிகளை தொடர சுற்றுலா அதிகார சபை முடிவு-Sri Lanka Tourism to continue Nature Interpretation Training in National Parks

பயணிகளுக்கு வனவிலங்குகள் தொடர்பான சிறந்த அனுபவத்தை வழங்குவதே நோக்கம்

பார்வையாளர்களுக்கு வனவிலங்குகள் தொடர்பான சிறந்த அனுபவத்தை வழங்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதும், அவர்களை மீண்டும் அதனை பார்வையிட ஊக்குவிப்பதும், அண்மைக் காலங்களில் இயற்கை சார்ந்த சுற்றுலாவின் மூலம் இலங்கை எதிர்கொண்ட துரதிர்ஷ்டவசமான பெயரை மாற்றியமைக்க உதவுவதும் மிக முக்கியமான விடயம் என, சுற்றுலா ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையானது, சுற்றுச்சூழல் அமைப்புகளின் கூட்டமைப்புகள் (FEO) மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் (DWC) ஆகியவற்றுடன் இணைந்து ஜீப் சாரதிகளுக்கான இயற்கை விளக்கப் பயிற்சியை வருடம் மின்னேரியா மற்றும் கவுடுல்ல தேசிய பூங்காக்களில் வெற்றிகரமாக நடாத்தியிருந்தது, அந்த வகையில் யாலா தேசிய பூங்காவில் இம்முறை தொடர எதிர்பார்த்துள்ளது.

ஜீப் சாரதிகளுக்கு, இயற்கை விலங்குகள் மற்றும் தாவரங்களின் முக்கியத்துவம் குறித்தும், குறிப்பாக பார்வையாளர்களால் அடிக்கடி முன்னவைக்கப்படும் எதிர்மறையான கருத்துக்களைக் குறைப்பதற்காக, பூங்காவில் ஒழுக்கத்தை பேணுவதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் கற்பிப்பதற்காக இத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் யானை ஆராய்ச்சியாளருமான டாக்டர் சுமித் பிலபிட்டிய, இலங்கை உள்நாட்டு சுற்றுலா சேவை வழங்குனர் சங்கத்தின் உறுப்பினர்  நிஷாத் விஜேதுங்க, (SLAITO), வரலாற்றாசிரியர், நெரஞ்சனா குணதிலக மற்றும் வன வள பாதுகாப்பு விஞ்ஞானியும் இயற்கை விளக்கமளிப்பாளருமான ராகுல பெரேரா ஆகியோரால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், மின்னேரியா மற்றும் கவுடுல்ல பூங்காக்களின் காப்பாளர்களின் பங்களிப்புடன் 1,100 இற்கும் மேற்பட்ட சபாரி ஜீப் (Safari Jeep) சாரதிகள் பயிற்சி பெற்றனர்.

இவ்வாறான பயிற்சித் திட்டங்களை விரைவில் யாலாவிலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள்ளார்.


Add new comment

Or log in with...