சீனப் பெண் குணமடைந்தார்; 16 பேர் சந்தேகத்தில் அனுமதி

சீனப் பெண் குணமடைந்தார்; 16 பேர் சந்தேகத்தில் அனுமதி-Chinese Women Cured from Coronavirus-IDH

கொரோனா பலி 259 ஆனது; 11,791  பேருக்கு தொற்று

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நேற்று (31) மேற்கொள்ளப்பட்ட இறுதி கணக்கெடுப்பின் படி மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கமைய, சீனாவில் இதுவரை 259 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 2,102 பேரை இவ்வைரஸ் தொற்று ஆட்கொண்டுள்ளதன் மூலம் இவ்வைரஸ் தொற்று 11,791  பேருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு, தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் தொற்றுநோய் வைத்தியசாலையில் (IDH) தங்கி சிகிச்சை பெற்று வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண், பூரணமாக குணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இன்று (01) தகல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (31) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் முடிவின் அடிப்படையில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய அவரை வைத்தியசாலையிலிருந்து அனுப்புவதில் எவ்வித பிரச்சினையும் எல்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 16 பேர், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அனில் ஜாசிங்க, அவர்கள், கொரோனா வைரஸ் தொடர்பில் நாடு முழுவதும் தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதில் 10 பேர் அங்கொடவிலுள்ள தொற்றுநோய் வைத்தியசாலையில் (IDH) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர் வெளிநாட்டவர்கள் எனவும அவர் தெரிவித்தார். அத்துடன் 3 பேர் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், 2 பேர் இரத்தினபுரி போதான வைத்தியசாலையிலும், ஒருவர் கராபிட்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த நபர்களுக்கு 99.5% கொரோனா தொற்று இல்லையென கூறலாம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் நேற்று முன்தினம் (30) உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கொரோனா தொற்று தொடர்பில் உலகளாவிய சுகாதார ரீதியிலான அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இலங்கையிலும் அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உயர் மட்டத்தில் மேற்கொள்வதற்கான தயார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் நேற்று (31) முதல் விசேட படிவமொன்று வழங்கப்பட்டு வருகின்ற முறைமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதனை ஞாபகப்படுத்திய அவர், 'Welcom to the Paradise of Sri Lanka' எனும் துண்டுப் பிரசுரமும் அவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த துண்டுப்பிரசுரத்தில், கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் முன் ஆயத்தம் மற்றும் அது தொடர்பிலான அவசர தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது சீன மொழியிலும் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் சுற்றுலா பயணிகளை தொடர்ந்தும்  வரவேற்கும் நாடாக இலங்கை உள்ளது என்பதை அவர்களுக்கு அறிவிக்கும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அது தவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் விசேட படிவமொன்று வழங்கப்பட்டு அதில் சுற்றுலா பயணிகள் தொடர்பிலான விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...