அனைத்து புலனாய்வுத் துறைகளும் உள்ளடக்கப்பட்டதாக, புலனாய்வுப் பிரிவுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் அவற்றிற்கு அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும், மகாவலி, விவசாயம், நீர்ப்பானம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரும், உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு, மற்றம் பாவனையாளர் நலன்புரி அமைச்சருமான சமல் ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று (15) கொழும்பிலள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை கண்டறிந்து அவற்றை தடுக்கும் நோக்கிலான அத்தியாவசிய நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்கும் பொருட்டு, இலங்கை புலனாய்வுத் துறை மிகப் பெரும் பங்கை ஆற்றி வருகின்றது.
புலனாய்வுத் துறையின் மூலம், தீவிரவாதம் உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகள் மற்றும் தேசிய பிரச்சினைகளின் போதான பரிந்துரைகள் மூலம் தேசிய பாதுகாப்பை முறையாக மேற்கொள்ளும் பொருட்டு பாரிய பங்களிப்பை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கை தொடர்பில் இடம்பெறும் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தவும், புலனாய்வுப் பிரிவுக்கு அதிகாரத்தை வழங்கி அவர்களது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அத்துறைக்கு அவசியமான சட்ட ஏற்பாடுகள் தற்போது இல்லாத காரணத்தினால், ஒரு சில புலனாய்வு பிரிவுகளின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி, அனைத்து புலனாய்வுத் துறைகளையும் உள்ளடக்கியதாக புதிய சட்டத்தை உருவாக்க, சட்ட உருவாக்க பிரிவுக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Add new comment