"இராஜாங்க அமைச்சு விடயதானங்கள் வர்த்தமானிப்படுத்தவும்"

"இராஜாங்க அமைச்சு விடயதானங்கள் வர்த்தமானிப்படுத்தவும்"-Functions and Duties of State Ministers Duties-Gazette

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி செயலாளர் அறிவிப்பு

இராஜாங்க அமைச்சர்களுக்கான விடயதானங்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜெயசுந்தர, அமைச்சின் செயலாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.  

அமைச்சரவையில் அங்கம் வகிக்காத இராஜாங்க அமைச்சர்களுக்கு விடயதானங்கள் மற்றும் பொறுப்புகள் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைவாக இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.  

ஒவ்வொரு அமைச்சுக்களிலும் இராஜாங்க அமைச்சுக்களுக்கு ஒதுக்கவேண்டிய விடயதானங்கள்,பொறுப்புக்கள்,அதனுடன் தொடர்புள்ள நிறுவனங்கள், கட்டளைச் சட்டங்கள் அடங்கலான ஆவணங்களும் இந்தக் கடித்தத்துடன் அமைச்சின் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  

அரசியலமைப்பின் 44(5) சரத்திற்கமைய இந்த வர்த்தமானியை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார்.  

அதேவேளை அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்களினூடாக மேற்கொள்ள எதிர்பார்க்கும் விடயங்கள் இருக்குமாக இருந்தால் அதனுடன் தொடர்புபட்ட நிறுவனங்கள், விடயதானங்கள்,பொறுப்புகள் மற்றும் கட்டளைச்சட்டங்கள் என்பவற்றையும் இவ்வர்த்தமானி அறிவிப்பில் உள்ளடக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் 16 பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட்டது.

இது தவிரி 38 இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். அமைச்சர்களுக்கான விடயதானங்கள் ஏற்கெனவே வர்த்தமானியூடாக வெளியிடப்பட்டதோடு இராஜாங்க அமைச்சர்களுக்கும் பொறுப்புகளை வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். இதற்கமைய 38 இராஜாங்க அமைச்சர்களுக்கும் அமைச்சின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் நாட்களில் விடயதானங்கள் மற்றும் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.(பா)  


Add new comment

Or log in with...