ஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கும் பிணை

கைது செய்ய உத்தரவிடப்பட்டிருந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ ரங்கா, வவுனியாவின் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) உள்ளிட்ட 6பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இன்றையதினம் (18) வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜரானதை அடுத்து, அவர்களுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில், ஸ்ரீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்தார், ஜயமினி புஸ்பகுமார எனும் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தைச் செலுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஸ்ரீரங்காவே வாகனத்தைச் செலுத்தியதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, இறந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவியினால் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதன் மூலம் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய ஶ்ரீ ரங்கா உள்ளிட்டோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு  தெரிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளில் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில், ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததோடு, ஜே. ஶ்ரீரங்◌ாக உள்ளிட்ட மற்றுமொருவர் வவுனியா நீதிமன்றில் இன்று (18) முன்னிலையாகியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த 6 பேருக்கும் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...