கள்ளியங்காடு குண்டுதாரியின் உடல் பாகங்கள் தோண்டியெடுப்பு

கள்ளியங்காடு குண்டுதாரியின் உடல் பாகங்கள் தோண்டியெடுப்பு-Terrorist Azath Remains Exumed-Kalliyankadu Batticaloa

நீதிபதி றிஸ்வானின் உத்தரவுக்கமைய நடவடிக்கை

மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரியின் தலைப் பகுதி இன்று (02) திங்கட்கிழமை பிற்பகல் தோண்டி எடுக்கப்பட்டது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று தற்கொலை குண்டு தாக்குதல் நடாத்திய பயங்கரவாதி நசார் முகம்மட் ஆசாத் என்பவரின் தலைப் பகுதி கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிசாரினால் புதைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக இதை தோண்டி அகற்றுமாறும் வலியுறுத்தி மட்டக்களப்பில் பல கண்டன ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதுடன் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன.

கள்ளியங்காடு குண்டுதாரியின் உடல் பாகங்கள் தோண்டியெடுப்பு-Terrorist Azath Remains Exumed-Kalliyankadu Batticaloa

இதையடுத்து பொலிசாரினால் இந்த விவகாரம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டதையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.எம். றிஸ்வான் புதைக்கப்பட்ட இந்த தற்கொலை குண்டுதாரியின் தலைப் பகுதியை தோண்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைத்து, தகுந்த இடத்தில் புதைக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து குறித்த தற்கொலை குண்டுதாரியின் தலைப் பகுதி இன்று (02) திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத நீதிபதி ஐ.எம். றிஸ்வான் முன்னிலையில் தோண்டப்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.

குறித்த தற்கொலை குண்டுதாரியின் தலைப் பகுதி மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த தலைப் பகுதி மட்டக்களப்பு மாவட்ட செயலாளரினால் தெரிவிக்கப்படும் இடத்தில் விரைவில் அடக்கம் செய்யப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த உடல் பாகங்கள் தோண்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)


Add new comment

Or log in with...