தவறான உணவுப் பழக்கம்!

உலகெங்கும் வாழ்கின்ற மக்களை பல்வேறு விதமான தொற்றாநோய்களே இக்காலத்தில் பெரிதும் இம்சைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இலங்கையும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

நீரிழிவு, புற்றுநோய், இருதய வியாதிகள், சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம், இரத்த அழுத்தம் என்றெல்லாம் தொற்றா நோய்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்ல முடியும்.

இவ்வியாதிகளெல்லாம் முன்னைய காலத்தில் வயது வந்தவர்களை மாத்திரமே பாதித்து வந்ததை நாமறிவோம். இன்றைய காலத்தில் அவ்வாறில்லை... தொற்றாநோய்கள் சிலவற்றுக்கு சின்னஞ்சிறார்களே ஆளாகின்ற பரிதாபத்தைக் காண முடிகின்றது.

வயதானவர்களுக்கு வர வேண்டிய தொற்றாநோய்களுக்கெல்லாம் மாணவப் பருவத்தினரும் இலக்காகும் கொடுமையை நாம் காண்கிறோம். இவ்வியாதிகள் ஒருபுறமிருக்க, இன்றைய காலத்தில் மாணவப் பருவத்தினர் மத்தியில் அதிகரித்த உடல் பருமன் என்பது பிரதான ஆரோக்கியப் பிரச்சினையாகக் காணப்படுவதாக வைத்தியர்கள் கூறுகின்றனர். இலங்கைச் சிறார்கள் மத்தியிலும் இப்பிரச்சினை அதிகரித்து வருவதை அபாயமான அறிகுறியாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

சிறுவர்களைப் பொறுத்தவரை உடல் பருமன் அதிகரிப்பு என்பது ஆரம்பத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தாத போதிலும், அப்பிரச்சினையினால் அவர்கள் எதிர்காலத்தில் பாரதூரமான தொற்றாநோய்களுக்கு ஆளாக வேண்டி ஏற்படுமென எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எதிர்காலத்தில் நீரிழிவு, இரத்தக் கொழுப்பு அதிகரிப்பு, இருதய வியாதி, சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றுக்கெல்லாம் வழிகோலுபவையாக உடல்பருமன் அதிகரிப்பு காணப்படுகிறது. ஆகவே சிறுவர்கள் மத்தியில் உடல் பருமன் அதிகரிப்பு என்பதை சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் மருத்துவர்கள் கூறுகின்ற எச்சரிக்கையாகும்.

முன்னைய காலத்தில் தொற்றாநோய்களால் எமது மக்கள் பீடிக்கப்படுவது மிகக் குறைவாகவே இருந்தது. புற்றுநோய், இருதய நோய், சிறுநீரக வியாதிகள் என்பதெல்லாம் அதிகம் கேள்வியுறாத வியாதிகளாகவே இருந்தன. இன்று அவ்வாறல்ல... மனித குலத்துக்கு தொற்றுவியாதிகள்தான் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன.

அன்றைய காலத்தில் காணப்படாத வியாதிகளெல்லாம் இன்றைய காலத்தில் மக்களை இவ்வாறு ஆட்டிப் படைப்பதற்கான காரணங்களை மருத்துவ நிபுணர்கள் தெளிவாகவே எடுத்துக் கூறுகின்றனர்.

மக்களின் இன்றைய உணவுப் பழக்கமும் நெருக்கடி நிறைந்த வாழ்க்கை முறையுமே மனிதனை வாட்டிவதைக்கின்ற தொற்றாநோய்களுக்கெல்லாம் பிரதான காரணங்கள் என்பதுதான் வைத்திய நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இவ்விரு காரணங்களையும் எடுத்துக் கொள்வோமானால், இன்றைய நவீன யுகத்தில் அவசரமும் நெருக்கடியும் நிறைந்த வாழ்க்கை முறையென்பது தவிர்க்க முடியாததாகும். காலையில் உறக்கம் விட்டெழுந்தது தொடக்கம் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நாம் ஒவ்வொருவரும் ஓயாத இயந்திரமாகவே இயங்கிக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.

போட்டா போட்டிகளும் எதிர்காலக் கனவுகளும் நிறைந்த இன்றைய மனித வாழ்வில் இவ்வாறான ஓயாத இயக்கமென்பது தவிர்க்க முடியாமல் போயுள்ளது. இவ்வாறு பரபரப்பாக இயங்காத பட்சத்தில் நாம் பின்தள்ளப்பட்டுப் போவோம் என்பதுதான் யதார்த்தம். எனவேதான் இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். அதன் விளைவாக பாரதூரமான வியாதிகளையும் அவர்கள் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

தொற்றாநோய்களுக்கான மற்றைய காரணம் எமது இன்றைய உணவுப் பழக்கம்.

எமது மக்களின் உணவுப் பழக்கம் இன்றைய காலத்தில் முற்றாகவே மாறிப் போய் விட்டது. இயற்கையாக விளைந்த உணவுகளை, இயற்கையாகச் சமைத்து உண்ட காலம் மலையேறிப் போயுள்ளது. அவ்வாறான இயற்கை உணவை சுவைத்து உண்பதற்கு எமது சிறார்கள் மாத்திரமன்றி வயது வந்தவர்களும் இன்று தயாரில்லை.

மனிதனின் உணவு ரசனை இப்போது முற்றாகவே மாறி விட்டது. அது மட்டுமன்றி, எமது குழந்தைகளையும் இன்றைய நவீன உணவுப் பழக்கத்துக்கு நாம் மாற்றி விட்டோம் என்பதுதான் பெரும் கொடுமை!

அவற்றின் சுவையைப் பற்றி மாத்திரமே நாம் அக்கறைப்படுகின்றோம். அவற்றினுள் அடங்கியுள்ள மணமூட்டிகள், சுவையூட்டிகள், நிறமூட்டிகள், பதப்படுத்தும் இரசாயனங்கள் எவையென்பதெல்லாம் எமக்குத் தெரிவதில்லை.

அவற்றை அறிந்து கொள்ள வேண்டுமென கரிசனையும் எவருக்கும் இல்லை. அந்த உணவுக்குள் அடங்கியுள்ள அத்தனை சேர்மானங்களும் இரசாயனப் பதார்த்தங்காளாகும். அவை எமது உடல் உள்ளுறுப்புகளுக்கு எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்துமென்பதையும் எவரும் கண்டுகொள்வதில்லை. இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அரசாங்க திணைக்களமும் அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை.

இவ்வாறான இரசாயனங்களே மக்களை அணுவணுவாகக் கொல்கின்றன என்றெல்லாம் மருத்துவ நிபுணர்கள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்ற போதிலும், அவ்விடயத்தில் எதுவித பலனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இளவயதினர் இவ்வாறு நவீன உணவுகளுக்கு அடிமையாகப் போனதற்கு அவர்களது பெற்றோரே காரணமாவர்.

பாடசாலைகளில் வழங்கப்படுகின்ற போஷாக்குணவுகளைக் கூட மாணவர்களில் பலர் விரும்பி உண்பதில்லை என்றொரு தகவலை அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். அவை சத்துணவுகளாக இருந்த போதிலும், உணவகங்களில் விற்கப்படுகின்ற மாப்பண்டங்களையே மாணவர்கள் விரும்புகின்றனர்.

சத்து நிறைந்த சாதாரண உணவுகளுக்கு அம்மாணவர்கள் பழக்கப்படவில்லை. இத்தவறுக்குக் காரணம் அம்மாணவர்களின் பெற்றோராவர். உடலுக்கு போஷாக்குத் தருகின்ற உணவைத் தவிர்த்து, சுவையை மட்டும் தருகின்ற உணவுகளின் மீதே மாணவர்கள் நாட்டம் கொள்கின்றனர். இவ்வாறான உணவுப் பழக்கமே மாணவர்கள் மத்தியில் உடல் பருமன் உபாதையையும் தோற்றிவித்துள்ளது.

எமது உணவுப் பழக்கம் முன்னைய காலத்தைப் போல மாற்றியமைக்கப்பட வேண்டும். வீணான நோய்களைத் தவிர்த்து வாழ்வதற்கு முன்னைய உணவுப் பழக்கமே சிறந்த வழியாகும். சிறார்களின் உணவு விடயத்தில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.


There is 1 Comment

Add new comment

Or log in with...