தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பிணையில் விடுவிப்பு

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் பவாஸ் (38) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று (15) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன குறித்த உத்தரவை வழங்கினார்.

தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் சுவரொட்டிகள், அமைப்பின் போதனைகள் அடங்கிய பென்ட்ரைவ், போதனைகளுடனான காணொளிகள் அடங்கிய கையடக்க தொலைபேசிகள் என்பன காணப்பட்டதாக தெரிவித்து அவர் கொழும்பு, வாழைத்தோட்ட தொடர்மாடி குடியிருப்பிலுள்ள வீடொன்றில் வைத்து கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து விளக்கமறியில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட மொஹமட் பாருக் பவாஸ், கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (15) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தற்போது வரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமைய, அவருக்கு பிணை வழங்குவதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடப்போவதில்லை என, சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட கடிதத்தை ஆராய்ந்து பார்த்த பின்னர் இந்த பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தலா ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் மொஹமட் பாருக் பவாஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், குறித்த வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Add new comment

Or log in with...