தேடப்பட்டு வந்த 3 பயங்கரவாத சந்தேகநபர்கள் நேற்று கைது

கம்பளை, மாவனல்லையில் தேடுதல்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கம்பளையில் உள்ள பாதணி வர்த்தக நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் இருவரை கைதுசெய்துள்ளனர். மொஹமட் சாதிக் அப்துல்ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல்ஹக் ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு

கைதுசெய்துள்ளனர். இதேவேளை, பொலிஸாரினால் தேடப்பட்ட மற்றுமொரு தீவிரவாதியாக அடையாளங்காணப்பட்ட பாதீமா லதீபாவும் மாவனல்லை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்விரு கைதுகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளதாவது,

நாவலப்பிட்டிய பொலிஸார் நேற்றுமுன்தினம் இரவு நாவலப்பிட்டி நகரில் மேற்கொண்டிருந்த சுற்றிவளைப்பில் சந்தேகத்திற்கிடமான வான் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். இவ்வாகனம் தொடர்பில் வான் சாரதியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம், உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகளுடன் தொடர்புடைய இருவரை கொழும்பிலிருந்து ஏற்றி வந்து கம்பளையில் உள்ள பாதணி வர்த்த நிலையமொன்றில் இறக்கிவிட்டதாக வான் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இத்தகவலின் பிரகாரம் கம்பளையில் உள்ள குறித்த பாதணி வர்த்தக நிலையத்தை நேற்று அதிகாலை சுற்றிவளைத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும், இராணுவத்தினரும் பயங்கரவாத் தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் என புகைப்படங்கள் மூலம் வெளியிட்டிருந்த மொஹமட் சாதிக் அப்துல்ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல்ஹக் ஆகியோரை கைதுசெய்தனர்.

குறித்த பாதணி விற்பனை நிலையத்தினை நாவலபிட்டி பொலிஸார் சுற்றிவளைத்த போதும் குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டு இருந்தது. இதன் போது குறித்த வர்த்தக நிலையத்தில் போடப்பட்டிருந்த பூட்டினை உடைத்து பாதணி விற்பனை நிலையத்திற்குள் புகுந்த பொலிஸார் இரண்டு பிரதான சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது

இவர்களுடன் குறித்த வான் சாரதியும் கைதுசெய்யப்பட்டு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நாவலபிட்டி நகரில் உள்ள பள்ளிவாசல்கள், அரபு மத்ரஸாக்கள், உட்பட பல இடங்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள மொஹமட் சாதிக் அப்துல்ஹக், மாவனல்லை புத்தர் சிலைகளை சேதப்படுத்தி தலைமறைவான பிரதான குற்றவாளிகளில் ஒருவராவார். கடந்த ஆண்டு புத்தளம் வன்னாத்திவில்லு பிரதேசத்தில் இவருக்குச் சொந்தமான காணி ஒன்றை சுற்றிவளைத்த போது அங்கிருந்து பெருமளவிலான வெடிபொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையால் மீட்கப்பட்டது. இதனையடுத்தே மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இவர் தலைமறைவாகியுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸாரினால் வெளியிடப்பட்டிருந்த தீவிரவாதிகளின் புகைப்படங்களில் இவரினதும் இவரின் மனைவி பாதீமா லதீபாவின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டிருந்தன.இந்த நிலையில் குறித்த சந்தேகநபர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கண்கள் கட்டிய நிலையில் நேற்றுமுன்தினம் மாவனல்லையில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் அவரது மனைவி தனது தாயின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு குறித்த பெண்ணின் பெற்றோர் அவர்களை பொறுப்பேற்க மறுத்துள்ளதுடன், பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாத்திமா லதீபாவை கைதுசெய்துள்ளனர்.


Add new comment

Or log in with...