'இதயத்தைப் பிழிகின்றது பிஞ்சுக் குழந்தையின் ஓலம்!

மழலைகளையும் பலியெடுக்க துடிக்கும் பயங்கரவாதம்!

இலங்கையில் குண்டுத் தாக்குதல்கள் நடந்து ஒருவாரம் கடந்த ​போதிலும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. கொழும்பு இன்னும் இராணுவத்தின் முழுமையான பாதுகாப்பில்தான் இருக்கிறது.அதுமாத்திரமன்றி நாட்டின் முக்கிய இடங்கள் முழுவதும் படையினர் அதிதீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

சாய்ந்தமருது தாக்குதலில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக இணையச் செய்திகள் கூறுகின்றன. அங்கு கொல்லப்பட்ட எல்லோரும் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அது தங்களுடைய முகாம்தான் என்று ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தன்னுடைய 'அமாக்' இணைய பக்கம் மூலம் தெரிவித்துள்ளது.

"எங்கள் மனைவிகள் அழிந்தாலும் சொர்க்கத்தில் சந்திப்போம்.நாங்கள் அழிந்து போனாலும் போராட்டம் தொடரும்" என்று ஆவேசத்துடன் குண்டுதாரிகள் மரணத்திற்கு முன்பு சபதம் ஏற்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் 3 ஆண்கள் உள்ளனர். ஒருவர் வயதானவர். மற்ற இருவரும் இளைஞர்கள். ஒருவருக்கு கையில் விரல்கள் இல்லை. துண்டிக்கப்பட்டது போல தெரிகிறது. ஒருவரின் மடியில் குழந்தை உள்ளது. அவருடைய குழந்தை போலத் தெரிகிறது. வீட்டின் மற்ற பகுதிகளில் குழந்தைகள் அழும் சத்தம் கேட்கிறது. பெண்களும் அங்கு இருப்பது போலத் தெரிகிறது.

3 ஆண்களும் மாறி மாறி ஆவேசமாக பேசுகின்றனர்.

"அழித்தொழிக்கும் நடவடிக்கைக்கு தகுந்த பாடங்கள் புகட்டுவோம். நாங்கள் அழிந்து போனாலும் போராட்டம் தொடரும்" என்று மாறி மாறி அவர்கள் ஆவேசமாக பேசுகிறார்கள்.

இதேவேளை இத்தாக்குதலில் சிக்கிய தற்கொலைதாரியின் மகளை இலங்கை இராணுவத்தினர் காப்பாற்றிய போது 'வாப்பா' என அந்தப் பிஞ்சு குரல் கத்தியது அனைவரதும் நெஞ்சையும் பிழிய வைத்ததுள்ளதாக பத்திரிகையாளர் ப. தெய்வீகன் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சாய்ந்தமருதில் படையினருக்கும் தீவிரவாதக்குழுவுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் தற்கொலைக் குண்டுதாக்குதல் மேற்கொண்டு இறந்து போனவனின் மகளை படையினர் பாதுகாப்பாக தூக்கிக் கொண்டு வந்து அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றுகிறார்கள். அக்குழந்தையின் இரத்தக் கறைகளை துடைத்து விடுகிறார்கள். ஆயுதங்கள் தரித்த சீருடைப் படையினர் அவளை தூக்கிக் கொண்டுவரும் போது அவள் கதறி அழவில்லை. அவளுக்கு தன்னைச் சுற்றி என்ன நடைபெறுகிறது என்றே தெரியவில்லை.

அதிர்ச்சியிலிருக்கிறாளா அல்லது நேற்றிரவு வரை அப்பாவும் இப்படித்தான் ஆயுதத்துடன் இருந்தாரே, அவருடனும் இவர்களைப் போல இன்னும் பலர் ஆயுதங்களுடன் இருந்தனரே என்று பழக்கப்பட்டு விட்டாளா தெரியவில்லை.

ஆனால், அம்புலன்ஸ் வண்டிக்குள் ஏற்றி, கிடத்தி வைத்து இரத்தக் கறைகளை துடைத்து விடுகின்ற போதுதான், அவள் கைகள் நடுங்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. கூடவே, அப்போதுதான் அதிச்சியுற்று நினைவு திரும்பியவள் போல சூழ்நிலையை வித்தியாசமாக உணர்வதாகவும் தெரிகிறாள்.

உதடுகள் துடிக்க "வாப்பா" என்று அழுகிறாள். இதயத்தை ஒற்றை நாளத்தில் பிடித்து இழுத்து வெளியில் போட்டு விட்டது போல ஒரு கணம் உணர்கிறேன். சுற்றிலும் எல்லா சத்தங்களும் காற்றிலிருந்து விடைபெற்று சென்று விட்டன.அவள் அழைக்கின்ற "வாப்பா" என்ற சொல்தான் திரும்ப திரும்ப கேட்ட வண்ணமுமிருக்கிறது. உலகத்திலேயே கொடியதொரு சத்தமாக அது திரும்ப திரும்ப மனதைப் பிழிகிறது என்று பதிவிட்டுள்ளார் அப்பத்திரிகையாளர்.


Add new comment

Or log in with...