ரூ.25மில். பெறுமதியான மாணிக்க கல் திருட்டு

வைப்பக படம்

சந்தேகத்தில் நால்வர் கைது 

சுமார் 25மில்லியன் ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கல்லை விற்பனை நிலையமொன்றிலிருந்து திருடியதாக சந்தேகிக்கப்படும் நால்வரை பொலிஸார் மாணிக்ககல்லுடன் ஹோமாகம பிரதேசத்தில் கைது செய்துள்ளனர். 

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பேலியாகொடை மேல் மாகாண (வடக்கு) குற்ற விசாரணைப் பிரிவின​ரே இக்கைதை கடந்த 14ஆம் திகதி முன்னெடுத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.  மேற்படி மாணிக்கக் கல் விற்பனைக்காக நீர்கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றுக்கு எடுத்து வரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே கடந்த மார்ச் 24ஆம் திகதியன்று திருடப்பட்டிருப்பதாக மாணிக்கல் வியாபாரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். நால்வர் கொண்ட கும்பல் மாணிக்ககல் வியாபாரியை கடத்திச் சென்றதுடன் அவரிடமிருந்து மாணிக்கல் மற்றும் 50ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துள்ளது. 

கொள்ளைக்கும்பலைச் சேர்ந்தவர்கள் 32,34,39மற்றும் 48வயதுகளையுடைய வாயிக்கால, ஹோமாகம, பங்கதெனிய மற்றும் வடுமுனேகெதர பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மாணிக்ககல்லை வெளிநாட்டவர் ஒருவர் வாங்க விரும்புவதாகக் கூறி அவரிடம் அழைத்துச் செல்லும் நோக்கில் வான் ஒன்றில் மேற்படி வியாபாரி கூட்டிச் செல்லப்பட்டார். வேனுக்குள் வைத்து துப்பாக்கி முனையில் வியாபாரியிடமிருந்து மாணிக்ககல் கொள்ளையடிக்கப்பட்டதுடன் அவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா பணமும் கோரப்பட்டது. எனினும், வியாபாரி தன்னிடம் அவ்வளவு பணம் இல்லையெனக்கூறி ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து 50ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக் கொடுத்ததன் பின்னர் அவர் நீர்கொழும்பில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியொன்றில் விட்டுச் செல்லப்பட்டார். 

பேலியாகொடை குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் பிரதான சந்தேக நபர் பிட்டிபன, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவரென கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் அவர் வலானை குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக நடித்துள்ளமைக்கான தகவல்களும் கிடைத்துள்ளன. 

சித்திரைப் புதுவருடப் பிறப்பன்று நீர்கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றுக்கு முன்னாள் வைத்து பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து அவரது வீட்டில் தேடுதல் நடத்தியபோது அங்கிருந்து மாணிக்ககல்லை பொலிஸார் மீட்டுள்ளனர். பிரதான சந்தேக நபரின் வாக்குமூலங்களுக்கமைய ஏனைய சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரதான சந்தேக நபருக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீர்கொழும்பு நீதவான் விளக்கமறியல் விடுத்துள்ளார். அவருடன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட ஏனைய மூவரும் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...